Saturday, December 13, 2008

தாயகத்து நண்பனுக்கு......!

தாயக நண்பனே!
இயந்திர வாழ்வில் இயல்பை இழந்து நிற்கிறேன்.
உன்னைப்போல வானில் இருந்து விழும் குண்டுகளுக்கு பயமில்லை.
ஆனால் பொருளாதாரம் என்ற பேரணுகுண்டு வெடித்து எமது வாழ்வும்
சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது.
இணையம் ஊடாக உங்கள் இதயங்களை இணைப்போம்.
இடைவேளை கிடைக்கும் போதெல்லாம் உங்களை நினைப்போம்.
நிகழ்வுகள் எல்லாம் நினைவுகளுக்கு என்பதைப்போலத்தான்
அந்தக்காலத்தில் எல்லாம் நிகழ்ந்து முடிந்தன போலும்.
இப்போது இங்கே இதமான நினைவு என்றால் எதுவுமில்லை.
அர்த்தமற்ற போலி வாழ்க்கை.
நேரகாலம் பாராத உழைப்பு.
என்னை நம்பி இருக்கும் சில சீவன்களுக்காக இங்கே என் சீவன் இயங்குகிறது.
இயங்கவே வேண்டும். இல்லாவிட்டால் உங்கே இயங்காது.
அவனுக்கென்ன....! என்போர் ஒருபுறம் என்றால்....
என் உறவுகளைப்பார்த்து,
அவைக்கென்ன.....! என்போர் மறுபுறம்.
எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும்.
என்னைத்திருப்திப்படுத்த முனைந்து முனைந்து தோற்கிறேன்.

தாயக கனவுடன், தணலிடை நின்று சமராடி சரிகின்ற எம்
தாயக உறவுகளை நினைத்துப்பார்க்கிறேன்.
குருத்தாக வாழ்ந்து குருத்தாகவே வீழும் ஒரு கொடிய நிகழ்வு.
இங்கு நாம் வாழும் வாழ்வின் ஒரு புள்ளி சதவீதம் கூட அவர்கள் வாழவில்லை.
நாமெல்லாம், உறவுகள், செல்வங்கள் என சொல்கிறோம்.
இங்கு நாம் கண்ட சுகங்கள் ஒன்றைக்கூட அனுபவித்திருக்க மாட்டார்கள்.
எதிரி, எல்லை, எல்லாநேரமும் விழிப்பு,
எம்மக்களுக்கான காவல், இதுதானே அவர்கள் சிந்தனை.
எத்துனை துயர் தாங்கியிருப்பர்.
நாம் பனிக்காலம் என்ற உடன் 4 அல்லது 5 உடுப்பு.
குளிரூட்டி வெப்பவூட்டியாக மாறும்.
ஆனால்.....
அவர்களோ, மழை, வெயில், பனி, காற்று எதுவும் தெரியாமல்
நெருப்பாறுகளைக் கடக்கிறார்களே...!

உலகத்தில் இப்படிப்பட்ட பிறவிகளை வரலாறு என்ன செய்யப்போகிறது.
உலகமே ஒரு வரலாற்றுத்தவறை விடுகிறதே....!
வருத்தம் தான்.
எது நடந்தாலும் வாழ்வை ஓட்டத்தானே வேண்டும்.
உனது இடர் நிலைமையும்,
இடப்பெயர்வு சோகங்களும் என்னைப்பிழிகிறது.
கண்ணீரை மட்டுமே உன்க்கு இப்ப என்னால் அள்ளி அள்ளி
வழங்கமுடியும்.
எங்கிருப்பாயோ தெரியா...?
மாமரமோ மலைவேம்போ மஞ்சமுன்னாவோ
எந்த மரநிழலில் உன்வாழ்வு?
மகாவித்தியாலயமா, அல்லது அமெரிக்க மிஷனா, அல்லது எந்தக் கல்லூரியில்
உன் வாழ்வு?
பிள்ளையார் கோவிலா அல்லது முருகன் கோவிலா அல்லது காளி கோவிலா எந்தக்கோயிலில்
உன் வாழ்வு?
எங்கேயடா இருக்கிறாய்....?
எந்த முகவரியிட்டு கடிதம் அனுப்ப.....?

இண்டைக்கு நான் இடும் முகவரியை,
இருபத்துநாலு மணிநேரத்தில் இரக்கமற்ற இலங்கை அரசு மாற்றிவிடுமே..?

சாப்பாடு எப்படி? அளவைக் குறைத்தாயா அல்லது வேளையைக் குறைத்தாயா?
உன்னை எனக்கு தெரியும்.
இப்பொழுது அடிக்கடி விரதம் என்று சொல்லுவாய்.
ஒவ்வொரு கோவில் திருவிழாவை காரணம் சொல்லுவாய்.

காகங்களே காகங்களே காட்டுக்கு போறீங்களா?
காட்டுக்கு போய் எங்கள் காவல் தெய்வங்களை கண்டு களிப்பீர்களா?
இல்லை கவலையடைவீர்களா?
காவல் தெய்வங்களோடு, கால்வயிறு கஞ்சியோடு காலம் ஓட்டும்
காலத்தை எதிர்பார்க்கும் எம் உறவுகளையும் கேட்டதாக சொல்லுங்கள்.

எப்படி இருக்க வேண்டியவர்கள்.
என்ன இல்லை?
என்ன குறை?
எருதைப் பூட்டி, எருவைக் கொட்டின வயலை உழுது பயிரிட்டு
ஏப்பம் வருமளவிற்கல்லாவா சாப்பிட்டோம்.
ஏலேலோ பாடி படகை இறக்கினால்
எழுவான்கரை வெளிக்கும் வரை மீன் அள்ளுவோமே!

செம்மண்ணை செப்பமாக்கி,
செவ்வாழை நட்டு, செழிப்பாய் மரக்கறி வைத்து
சீரும் சிறப்புமாய்தானே வாழ்ந்தோம்!!

கோவிலுண்டு, காலாசார விழாவுண்டு என விழுமியங்களை பேணித்தானே வாழ்ந்தோம்.

நண்பா! இப்பொழுதும் அப்படித்தான் வாழ்கிறோம்.
ஆனால் இடர்கள் சூழ்ந்த நிலையில்.....!

உனது துயர் எனக்கு தெரியும்.
இதுவும் கடந்து போகலாம் - ஆனால்
இந்த நிலையும் மாறலாம் என்பதை புரிந்துகொள்.

இங்கிருந்து என்ன செய்யலாமோ எல்லோரும் சேர்ந்து அதைசெய்கிறோம்.
உன்னிடம் வேண்டுவது எல்லாம்,
உன்னால் என்ன முடியுமோ
அதை
உங்கிருந்து செய்!
சுதந்திரக் காற்றை எமது மக்கள் சுவாசிக்கும் போது,
நாம் தாழ்வுமனப்பான்மையுடன் தான் வந்து நிற்க வேண்டும்.
உங்களைப்போல் என்ன செய்தோம் போரிற்கு!
உங்களைப்போல் என்ன துயர்களை சுமந்தோம்!!
உங்களைப்போல் என்ன இழப்புக்களை தாங்கினோம்!!!

நண்பா! காலம் மலியும். காத்திரு.
நீ என்ன நம்பிக்கையுடன் தலைவனை தாங்கி நிற்கிறாயோ...
நாமும் அதே நம்பிக்கையுடன் நாளும் பொழுதும் நிற்கிறோம்.
வெல்வோம்.வாழ்வோம்.
இதை மாற்ற எவராலும் முடியாது.

மீண்டும் ஒரு மடலில் சந்திக்கிறேன்......
அதுவரை...........
என்றும் ஈர நினைவுகளுடன்

பனிதேசத்து நண்பன்.

Monday, November 10, 2008

நண்பா வணக்கம்....!

நண்பா வணக்கம்!

காலம் உருண்டு எங்கோ போகின்றது. கால நீரோட்டத்தில் அள்ளப்பட்டு அடித்துச்செல்லப்பட்டு இருவரும் வேறு வேறு திசையில். அங்கிருந்தாலும் உன் நினைவு இங்கேதான் இருக்கும். இங்கு நாம், சொன்ன உவமைக்கு உதாரணமாக அடித்துச்செல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

வாழ்விற்கான போராட்டம் போய் இப்போ போராட்டத்திற்கான வாழ்வு என்றாகி விட்டது. உணவு ஒரு பிரச்சினை இல்லையடா. இருக்க வீடு, அதுவும் பாடசாலைகள், கோவில்கள், சனசமூக நிலயங்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் நிம்மதி ஒன்றுதான் தேவையடா! மேலால கொண்டுவந்து கொட்டும் போது பதுங்குகுழியை தேடுவோம். அவன் கொட்டிப்போட்டு போன பின்னர் புதைகுழிகளை தேடுவோம்.

இரவென்ன பகலென்ன எல்லா நேரமும் வருவான். பகலிலேயே அடிச்சால் பொடியளிண்ட காம்புக்குள் விழாது. இரவில பரா வெளிச்சம் போட்டு அடிச்சு பொடியளை அழிப்பானாம்.

இரவுகள் எப்போதுமே கொடுமைதானடா. அம்மா, அப்பா, தம்பி படுத்திருந்தாலும் என் நித்திராதேவி என்னை அணைக்கமாட்டாள். ஏக்கங்களும் தாகங்களுமாகத்தானா எம் வாழ்வு முடிய வேண்டும். எமக்கு விடிவே வராதா. என்ன பாவம் செய்தோம். எமது இடத்தில் எம்மை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். ஏனடா இந்த அவலம்.

இப்படியான கவலைகளுடன் நாளிகைகள் கடந்தாலும், இடைக்கிடை எமது பால்ய நட்புக்கால நினைவு மூங்கில் துளையூடே காற்று புகுந்து உருவான மெல்லிசையைப் போல மனதை அள்ளும்.

ஆண்டு பதினொன்றுதானே நம்மை ஆட்டிப்படைத்தது. கொக்குவில் எடிசனில் படித்த அந்த நிலாக்கால நினைவுகளை வீட்டின் வேப்பமர நிழலில் இருந்து நினைப்பேன். விழியோரம் அருவிதானடா. என்ன குறை நமக்கு. படிப்பு ஒன்றுதானே வேலை. மற்றபடி எதை நாம் அலசாமல் விட்டோம். எமக்கு தெரிந்தவரை எல்லா விடயங்களையும் பிச்சு பிச்சு போடுவோமே.

ஆனைக்கோட்டை நந்தினி வெதுப்பகத்தில் சுடச்சுட பாணும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டு நவாலி மணல்பிட்டிகளில் சாப்பிட்டு ஓடி ஆடி குதித்து கும்மாளமிட்டு களிப்படைந்தோமே.

நல்லூர் திருவிழா காலைப்பூசைக்கு சென்று 7 மணிக்கே குளிர்களி (ஐஸ்கிறீம்) தின்றோமே. தேரில சாமி ஏறுதோ இல்லையோ ரொட்டியும் சீனிச்சம்பலும் திண்டால்தான் முருகன் அருளுவார் என நினைத்து உண்டோமே.

எதை மறக்க? எதை நினைக்க?

நிகழ்வுகள் எல்லாம் நினைப்பதற்குத்தானா? நினைவுகள் எல்லாம் மனதை பிசையத்தானா?

நீயோ இன்று டாலர் தேசத்தில். நானோ இன்று பூர்வீக ஈழமண்ணில். "நாங்கள் கரைதேடும் ஓடங்கள்.... "என்ற புஷ்பவனம் குப்புசாமியின் ஈழப்பாடலை நினைக்கும் போதெல்லாம் உனது நினைவுதான் நெஞ்சைப்பிளக்கும்.

"செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா...." என்ற பாடலை நீ அடிக்கடி கேட்பாய் என்றே எண்ணுகிறேன். சமர்க்கள செய்திகள் எல்லாம் நீங்கள் உடனுக்குடன் இணையத்தில் பார்ப்பீர்கள். நாங்கள் நேரே பார்க்கிறோம். உனக்கு இங்கு நடப்பவை பற்றி கவலையாக இருக்கும். காத்திரு. எல்லாம் கனியும். இங்கே எல்லாம் கனகச்சிதமாக நடக்கிறது. அடிவிழும் போது வெற்றிச்செய்தி கிடைக்கும். உனது தமிழோடு விளையாடி கவிதை தர காத்திரு.

எல்லையில நிற்கும் போராளிகளை நினைக்கும் போதெல்லாம் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்தான்.

சிந்தும் குருதிகள் வீணாகாது. நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. தலைவன் இருக்கிறான். பிறகென்ன கவலை.

வரும் வாரம் மாவீரர் வாரம். அது முடிய நினைவுகளுடன் உனக்கு மீண்டும் வரைவேன் மடல்.....! அதுவரை என்றும் உன் நண்பன்!

Tuesday, November 4, 2008

வணக்கம்!

என்றும் எம்மைவிட்டகலாத நினைவுகளும், இன்றும் எம்மைச் செதுக்கும் நிகழ்வுகளும், நாளை எமக்கென இருக்கும் நாழிகைகள் பற்றியும் செப்பும் ஒரு கடித வலைப்பூ.

புதிய பதிவில் சந்திப்போம்.........