Monday, November 10, 2008

நண்பா வணக்கம்....!

நண்பா வணக்கம்!

காலம் உருண்டு எங்கோ போகின்றது. கால நீரோட்டத்தில் அள்ளப்பட்டு அடித்துச்செல்லப்பட்டு இருவரும் வேறு வேறு திசையில். அங்கிருந்தாலும் உன் நினைவு இங்கேதான் இருக்கும். இங்கு நாம், சொன்ன உவமைக்கு உதாரணமாக அடித்துச்செல்லப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்.

வாழ்விற்கான போராட்டம் போய் இப்போ போராட்டத்திற்கான வாழ்வு என்றாகி விட்டது. உணவு ஒரு பிரச்சினை இல்லையடா. இருக்க வீடு, அதுவும் பாடசாலைகள், கோவில்கள், சனசமூக நிலயங்கள் இருப்பதால் பிரச்சினை இல்லை. ஆனால் நிம்மதி ஒன்றுதான் தேவையடா! மேலால கொண்டுவந்து கொட்டும் போது பதுங்குகுழியை தேடுவோம். அவன் கொட்டிப்போட்டு போன பின்னர் புதைகுழிகளை தேடுவோம்.

இரவென்ன பகலென்ன எல்லா நேரமும் வருவான். பகலிலேயே அடிச்சால் பொடியளிண்ட காம்புக்குள் விழாது. இரவில பரா வெளிச்சம் போட்டு அடிச்சு பொடியளை அழிப்பானாம்.

இரவுகள் எப்போதுமே கொடுமைதானடா. அம்மா, அப்பா, தம்பி படுத்திருந்தாலும் என் நித்திராதேவி என்னை அணைக்கமாட்டாள். ஏக்கங்களும் தாகங்களுமாகத்தானா எம் வாழ்வு முடிய வேண்டும். எமக்கு விடிவே வராதா. என்ன பாவம் செய்தோம். எமது இடத்தில் எம்மை நிம்மதியாக இருக்க விடுங்கள் என்றுதானே கேட்கிறோம். ஏனடா இந்த அவலம்.

இப்படியான கவலைகளுடன் நாளிகைகள் கடந்தாலும், இடைக்கிடை எமது பால்ய நட்புக்கால நினைவு மூங்கில் துளையூடே காற்று புகுந்து உருவான மெல்லிசையைப் போல மனதை அள்ளும்.

ஆண்டு பதினொன்றுதானே நம்மை ஆட்டிப்படைத்தது. கொக்குவில் எடிசனில் படித்த அந்த நிலாக்கால நினைவுகளை வீட்டின் வேப்பமர நிழலில் இருந்து நினைப்பேன். விழியோரம் அருவிதானடா. என்ன குறை நமக்கு. படிப்பு ஒன்றுதானே வேலை. மற்றபடி எதை நாம் அலசாமல் விட்டோம். எமக்கு தெரிந்தவரை எல்லா விடயங்களையும் பிச்சு பிச்சு போடுவோமே.

ஆனைக்கோட்டை நந்தினி வெதுப்பகத்தில் சுடச்சுட பாணும் வாழைப்பழமும் வாங்கிக் கொண்டு நவாலி மணல்பிட்டிகளில் சாப்பிட்டு ஓடி ஆடி குதித்து கும்மாளமிட்டு களிப்படைந்தோமே.

நல்லூர் திருவிழா காலைப்பூசைக்கு சென்று 7 மணிக்கே குளிர்களி (ஐஸ்கிறீம்) தின்றோமே. தேரில சாமி ஏறுதோ இல்லையோ ரொட்டியும் சீனிச்சம்பலும் திண்டால்தான் முருகன் அருளுவார் என நினைத்து உண்டோமே.

எதை மறக்க? எதை நினைக்க?

நிகழ்வுகள் எல்லாம் நினைப்பதற்குத்தானா? நினைவுகள் எல்லாம் மனதை பிசையத்தானா?

நீயோ இன்று டாலர் தேசத்தில். நானோ இன்று பூர்வீக ஈழமண்ணில். "நாங்கள் கரைதேடும் ஓடங்கள்.... "என்ற புஷ்பவனம் குப்புசாமியின் ஈழப்பாடலை நினைக்கும் போதெல்லாம் உனது நினைவுதான் நெஞ்சைப்பிளக்கும்.

"செல்லப்பா கொஞ்சம் நில்லப்பா...." என்ற பாடலை நீ அடிக்கடி கேட்பாய் என்றே எண்ணுகிறேன். சமர்க்கள செய்திகள் எல்லாம் நீங்கள் உடனுக்குடன் இணையத்தில் பார்ப்பீர்கள். நாங்கள் நேரே பார்க்கிறோம். உனக்கு இங்கு நடப்பவை பற்றி கவலையாக இருக்கும். காத்திரு. எல்லாம் கனியும். இங்கே எல்லாம் கனகச்சிதமாக நடக்கிறது. அடிவிழும் போது வெற்றிச்செய்தி கிடைக்கும். உனது தமிழோடு விளையாடி கவிதை தர காத்திரு.

எல்லையில நிற்கும் போராளிகளை நினைக்கும் போதெல்லாம் எம்மால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம்தான்.

சிந்தும் குருதிகள் வீணாகாது. நம்பிக்கை. நம்பிக்கை. நம்பிக்கை. தலைவன் இருக்கிறான். பிறகென்ன கவலை.

வரும் வாரம் மாவீரர் வாரம். அது முடிய நினைவுகளுடன் உனக்கு மீண்டும் வரைவேன் மடல்.....! அதுவரை என்றும் உன் நண்பன்!

Tuesday, November 4, 2008

வணக்கம்!

என்றும் எம்மைவிட்டகலாத நினைவுகளும், இன்றும் எம்மைச் செதுக்கும் நிகழ்வுகளும், நாளை எமக்கென இருக்கும் நாழிகைகள் பற்றியும் செப்பும் ஒரு கடித வலைப்பூ.

புதிய பதிவில் சந்திப்போம்.........